கேரளாவுக்கு எம்-சாண்ட் மணல் கடத்தல்? லாரிகளில் போலீசார் சோதனை
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து லாரிகளை போலீசார் சோதனை செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகும். மேலும் கேரளாவையொட்டி இந்த மாவட்டம் அமைந்துள்ளதால், அந்த மாநிலத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான ஜல்லி, கிரஷர் மற்றும் பாறைப்பொடிகளை ஒப்புதல் சீட்டு மூலம் வாங்கி செல்கின்றனர். ஆனால் அந்த ஒப்புதல் சீட்டுகளில் குறிப்பிட்டுள்ள அளவுகளை விடவும், கூடுதல் அளவுகளில் ஜல்லி, கிரஷர் மற்றும் பாறைப்பொடிகள் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
அதே வேளையில் தேனி மாவட்டத்தில் இருந்து எம்-சாண்ட் மணலை கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஆனால் லாரிகளில் ஜல்லி, கிரஷர் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும்போது, அதனுள் எம்.சாண்ட் மணலை மறைத்து வைத்து கடத்தப்படுவதாக மாவட்ட புவியியல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதுகுறித்து அவர்கள், உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று கம்பம் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவிற்கு ஜல்லிக்கற்களை ஏற்றிச்சென்ற லாரிகளை நிறுத்தி ஒப்புதல் சீட்டுகளை சோதனை செய்தனர்.
பின்னர் லாரிகளில் எம்-சாண்ட் மணல் மறைத்து வைத்து கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரிகளில் உள்ள ஜல்லிக்கற்களை தோண்டி பார்த்தனர். ஆனால் அதில் எம்-சாண்ட் மணல் இல்லை. இதையடுத்து அந்த லாரிகளை போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் எம்-சாண்ட் மணல் கடத்தலை தடுக்க இதுபோன்ற சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.