அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 212 பேர் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 212 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு, அவரது சகோதரர்கள் வீடு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை அறிந்ததும், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். அவர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எஸ். பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே. செல்வராஜ், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி, தாமோதரன், எம்.எஸ்.எம். அனந்தன், மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், ஒ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு உள்பட 200 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், 144 தடை உத்தரவை மீறி ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தடுப்புகளை தூக்கி வீசி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குனியமுத்தூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 212 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.