மன்னார்குடி, கொரடாச்சேரியில் இடைநின்ற பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு
மன்னார்குடி, கொரடாச்சேரி ஆகிய இடங்களில் இடைநின்ற பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணக்கெடுக்கும் முகாம் மன்னார்குடியில் நேற்று தொடங்கியது. இதனை மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பின்போது மன்னார்குடி அந்தோணியார்கோவில் தெரு பகுதியில் 10-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திக்கொண்ட மாணவர் மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன், ராமசாமி, வட்டார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர்கள் அருள்ஜெயசீலி, சிறப்பு ஆசிரியர் அனுசியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பு முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
கொரடாச்சேரி வட்டார வள மையத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. கொரடாச்சேரி அருகே செல்லூர் குடியிருப்பு பகுதியில் வட்டார கல்வி அலுவலர் சம்பத், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரபு ஆகியோர் தலைமையிலான குழுவினர் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்தமுத்து, கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் அம்மையப்பன், காவனூர் குடியிருப்பு பகுதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் கங்காதேவி, சிறப்பாசிரியர் மதுமதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும், கண்கொடுத்தவனிதம் பகுதியில் ஆசிரியர் பயிற்றுனர் கலைச்செல்வன், சிறப்பாசிரியர் பாபு அடங்கிய குழுவினரும், பண்ணைவிளாகம், தியாகராஜபுரம் குடியிருப்பு பகுதியில் ஆசிரியர் பயிற்றுனர் துர்கா, சிறப்பாசிரியர் உதயநிலா அடங்கிய குழுவினரும் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.
இதில் பள்ளியில் சேராமல் இருந்த 3 பேர் கண்டறியப்பட்டு அருகில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.