3 மருமகள்களும் பிரிந்து சென்றதால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகன் கொலை-உடலை எரித்த விவசாயி கைது
குடும்ப தகராறில் 3 மருமகள்களும் பிரிந்து சென்றதால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகனை கொலை செய்து, உடலை எரித்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள மேல்னுக்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 45). விவசாயி. இவருடைய மகன் லோகேஷ்குமார் (26). இவருக்கு 3 மனைவிகள். முதல் 2 மனைவிகள் குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டனர். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகேஷ்குமார் கிருஷ்ணகிரி அருகே உள்ள அமனேரி கிராமத்தை சேர்ந்த கொடியா (24) என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
லோகேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தனது மனைவி கொடியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட தகராறு காரணமாக, கொடியா கோபித்து கொண்டு, குழந்தையுடன் அமனேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கொடியா பிரிந்து சென்றதில் இருந்து லோகேஷ்குமாருக்கும், தந்தை ராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது ராஜி, உனது மது பழக்கத்தால் தான் 3 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர் என்று கூறி அவரை திட்டியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி அமனேரிக்கு சென்று கொடியாவை லோகேஷ்குமார் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. மேலும் குழந்தையையும் அவருடன் அனுப்ப மறுத்து விட்டார். பின்னர் அன்று இரவு அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ராஜி ஆத்திரமடைந்தார். மேலும், மனதை கல்லாக்கி கொண்டு மகனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மதுபாட்டிலை வாங்கி வந்து, அதில் விஷத்தை கலந்தார். பின்னர் விஷம் கலக்கப்பட்ட மதுவை லோகேஷ்குமாரிடம் கொடுத்து, இந்த மதுவை குடித்து விட்டு வந்து சாப்பிட்டு படு, விடிந்தவுடன் பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
லோகேஷ்குமாரும் மதுவில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல் அதை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து பலியானார். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க ராஜி மகனின் உடலை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு எடுத்து சென்று, அங்கு தீ மூட்டி எரித்தார்.
மேலும், கிராமத்தை சேர்ந்தவர்களிடம் தனது மகனை காணவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே அக்கம்பக்கத்தினர் லோகேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என்று பரவலாக பேச ஆரம்பித்தனர். மேலும் இதுதொடர்பாக ராயக்கோட்டை போலீசாருக்கும் தகவல் கிடைக்கவே, அவர்களும் ரகசியமாக விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
இதனை அறிந்த ராஜி திடீரென தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் எப்படியும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணிய அவர், நேற்று சூளகுண்டா கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேலிடம் மகனை கொலை செய்து உடலை எரித்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அவரை ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் ராஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி பீட்டர் உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மகனுக்கு மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை தந்தையே எரித்த சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.