கீழ்வேளூர் அருகே ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கீழ்வேளுர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-08-11 14:48 GMT
சிக்கல், 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர்சத்திரம்- பாப்பாகோவில் வரை செல்லும் சாலையில் வடக்காலத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாதா கோவில் பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மாதா கோவில் முன் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் சாய்ந்து எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த மின்கம்பம் உள்ள சாலை வழியாக தான் புதுச்சேரி, ஆவராணி, ஓரத்தூர், பாப்பாகோவில் உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் கனரக வாகனங்கள், ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது காற்று வேகமாக வீசுவதால் மின்கம்பம் சாய்ந்து விழுமோ என்ற அச்சத்தில பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து கடந்த ஒரு ஆண்டாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்