கி.பி. 9, 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை, புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு

காட்டுவாநத்தம் கிராமத்தில் கி.பி. 9,10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை, புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-11 14:01 GMT
திருவண்ணாமலை

காட்டுவாநத்தம் கிராமத்தில் கி.பி. 9,10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை, புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புடைப்பு சிற்பம்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது காட்டுவாநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் ஏரிக்கரையோரம் வேடியப்பன் கோவில் உள்ளது. 

இந்த கோவிலில் பழமை வாய்ந்த புடைப்பு சிற்பம் உள்ளதாகவும், அதனை பொதுமக்கள் வேடியப்பனாக வணங்குவதாவும் அந்த கிராமத்தை சேர்ந்த பவுன்குமார் என்பவர் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம், வினோத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். 
இதனையடுத்து அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது:-

3½ அடி உயரமும், 3½ அடி அகலமும் கொண்ட கற்பலகையில் கையில் செண்டு ஏந்திய நிலையில் அய்யனார் புடைப்பு சிற்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஊர் மக்கள் இந்த அய்யனாரை வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

பரந்துவிரியும் விரிசடையுடன் வட்ட முகமும், இரு காதுகளிலும் பத்ர குண்டலமும் அணிந்து தடித்த உதட்டுடன் சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தியும், வலது காலை கீழே தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார்.

வலது கையில் கடக முத்திரையில் செண்டை ஆயுதமாகவும், இடது கையை தனது தொடையின் மீது வைத்தும் காட்சி தருகிறார். கழுத்தில் கண்டிகை, சவடி ஆகிய அணிகலன்களுடன் முப்புரி நூலும் கைகளில் கைவலையும் அணிந்து கம்பீரமாக காட்சி தருகிறார்.

வேட்டை காட்சிகள்

இவரின் மனைவிகளான பூர்ணாவும், புஷ்கலாவும் வலமும், இடமும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இருவரும் கரண்ட மகுடம் தரித்து காதுகளில் பத்ர குண்டலங்களுடன் தத்தமது ஆயுதங்களுடன் காட்சி தருகின்றனர். 

அய்யனாரின் பாதத்தின் அருகே வேடன் ஒருவன் வேட்டையாடும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. 

நீண்ட தாடியுடன் தொடை வரை உடை அணிந்த வேடன் ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் அம்பும் தாங்கிக் கொண்டு நிற்க, வேட்டை நாய் ஒன்று இரு மான்களை துரத்துவது போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது. 

ஒரு மான் பயந்து பின்னோக்கி ஓட, மற்றொரு மான் நாயின் வாயில் அகப்பட்டு அதன் தலை மட்டும் திரும்பிய நிலையில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அய்யனாரின் வாகனமான யானை இடப்பக்க தோள் அருகே அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள அணிகலன்கள் மற்றும் வேட்டை காட்சிகளை எல்லாம் கருத்தில் கொண்டு இச்சிற்ப அமைப்பை வைத்து இந்த சிற்பம் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தியது என்று கூறலாம்.
கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்தது

மேலும் இவ்விடத்திற்கு அருகே புதருக்குள் சிலை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மேலும் ஆய்வு செய்ததில் அச்சிற்பம் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் என்று கண்டறியப்பட்டது.

சுமார் 4 அடி உயரமுள்ள இச்சிலை வழிபாடின்றி கைவிடப்பட்டுள்ளது. முகம் மற்றும் உடல் பகுதி மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. 

இதனை முறையாக அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்திட அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்