ஓட்டப்பிடாரம் அருகே கட்டிட தொழிலாளி மர்மச்சாவு

ஓட்டப்பிடாரம் அருகே கட்டிட தொழிலாளி மர்மான முறையில் இறந்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.

Update: 2021-08-11 13:38 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கட்டிட தொழிலாளி மர்மான முறையில் இறந்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.
கட்டிட தொழிலாளி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன்காலனி இருந்து குலசேகரநல்லூர் செல்லும் மங்கம்மாள் சாலையில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் என்ற குமார் (வயது 37), நெல்லை வாகைகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணமூர்த்தி (38), இதே ஊரை சேர்ந்த முருகன் மகன் பழனிவேல் (26), தர்மர் மகன் மாரியப்பன் (30), அம்பாசமுத்திரம் அகஸ்தியர்புரம் சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் (45), பாவூர்சத்திரம் கல்லூரணி சந்தியாகப்பன் மகன் ஜேசுராஜ் (32) ஆகியோர் தங்கியிருந்து செய்து வருகின்றனர். 
மர்மச்சாவு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்குள் தூங்கினர். பாலமுருகன் என்ற குமார் மட்டும் வழக்கம் போல் அவர் தூங்கும் சமையல் அறையில் வந்து தனியாக தூங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் வெகுநேரமாக பாலமுருகன் எழவில்லை. உடன் தங்கியிருந்தவர்கள் அவரை எழுப்பியுள்ளனர். அப்போது பாலமுருகன் தலை மற்றும் முதுகில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிர் இழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது  உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவருடன் தங்கியிருந்தவர்களிடம்  போலீஸ் சூப்பிரண்டு் விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடய அறிவியலர் வரவழைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இறந்த பாலமுருகனுக்கு அனிதா என்ற மனைவியும் மஞ்சு, இசக்கியம்மாள் என்ற மகளும் சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்