தூத்துக்குடியில் பிரபல ரவுடிகள் 5பேர் கைது

தூத்துக்குடியில் நேற்று பிரபல ரவுடிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-11 13:11 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று பிரபல ரவுடிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கைது செய்ய தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை 111 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மேற்பார்வையில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பிரபல ரவுடிகள் சிக்கினர் 
புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சந்தேகமான வகையில் முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மில்லர்புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த திருமணி மகன் பாலு (வயது 29) மற்றும் தூத்துக்குடி கே.துரைசாமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் முனியசாமி (35) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் தலா 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இந்த பகுதியில் ஒருவரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதும், பிரபல ரவுடிகள் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும்  கைது செய்தனர்.
மேலும் 3பேர் கைது
இதே போன்று சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாநகர் 7-வது தெருவில் சந்தேகமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் கண்ணன் (23), ராஜகோபால் மகன் நரேஷ்குமார் (22) மற்றும் தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் ரமேஷ் (24) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து டிரைவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும்  கைது செய்தனர். இவர்களும் பிரபல ரவுடிகள் ஆவர்.

மேலும் செய்திகள்