ஸ்டான்லி ஆஸ்பத்திரி விடுதியில் மருத்துவ மாணவி மர்மச்சாவு - போலீசார் விசாரணை
ஸ்டான்லி ஆஸ்பத்திரி விடுதியில் மருத்துவ மாணவி மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பூர்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்தவர் சோபியா (வயது 27). இவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி பெண்கள் விடுதியில் தங்கி முதுநிலை அனஸ்தீசியா மருத்துவம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வெகுநேரமாகியும் வகுப்புக்கு வராததால் உடனிருந்தவர்கள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, விடுதியின் அறை உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, விடுதி அறையில் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தார். அப்போது அவரது மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரை தள்ளி உடல் முழுவதும் நீல நிறத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள புறநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ கல்லூரி மாணவி சாவுக்கு காரணம் என்ன? என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவக்கல்லூரி விடுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.