சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பனமரத்துப்பட்டி ஏரியில் கலெக்டர் ஆய்வு

பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Update: 2021-08-10 22:20 GMT
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
பனமரத்துப்பட்டி ஏரி
பனமரத்துப்பட்டியில் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 
இந்த ஏரியை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரியும், மேட்டூர் உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஏரியை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஏரியின் நீர் தேக்க பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும், ஏரிக்கு தண்ணீர் வராததற்கான காரணம் குறித்தும், நீர்வரத்து பகுதிகளில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை அகற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 
மேலும் பனமரத்துப்பட்டி ஏரியில் எவ்வளவு தண்ணீர் சேமிக்க முடியும்? அதனை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியுமா? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழைப்பொழிவு இருந்தும் ஏரியில் ஏன்? தண்ணீர் தேங்கவில்லை என அவர் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். 
திட்ட அறிக்கை
மேலும் ஏரியில் நீர் தேங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும்படி அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதையடுத்து கலெக்டர் கார்மேகம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஏர்வாடிவாணியம்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
குமரகிரி கோவில்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் குமரகிரி தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரூ.5 கோடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்,  தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன், பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்முருகன், குமரேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜனார்த்தனன், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி, குமரகிரி தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி, இந்து சமய அறநிலைய துறை செயற்பொறியாளர் ஜமுனாதேவி உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்