கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

Update: 2021-08-10 20:00 GMT
மண்டியா:

கே.ஆர்.எஸ். அணை

  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

  நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11,273 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,382 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது.

கபினி அணை

  இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7,214 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 2,284(கடல் மட்டத்தில் இருந்து) அடி ஆகும்.

  நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,281.87 அடியாக இருந்தது. மேற்கண்ட 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தமாக வினாடிக்கு 10 ஆயிரத்து 382 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்