விவேக் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் - நடிகர் அஜய் ராவ் பேட்டி
விவேக் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என்று நடிகர் அஜய் ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ராமநகரில் நடந்த லவ் யூ ரச்சு கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி சண்டை கலைஞரான விவேக் இறந்தார். பெங்களூரு மாகடி சாலையில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விவேக்கின் உடலுக்கு லவ் யூ ரச்சு படத்தின் நடிகர் அஜய் ராவ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில், விவேக் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவரது சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை லவ் யூ ரச்சு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் குருதேஷ்பாண்டே, விவேக்கின் மாமா கோபி என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது ரூ.10 லட்சம் நிவாரணம் தருவதாகவும் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விவேக்கின் மரணத்திற்கு நடிகை ரஷிதா ராமும் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விவேக் குடும்பத்தினர் மீது கடவுள் கருணை காட்டட்டும். விவேக்கின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன். விவேக் இறந்த துயரத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பததினருக்கு கடவுள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.