மாநிலம் முழுவதும் நகர, கிராம அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக காங்கிரஸ் கிளை அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கூறினார்.

Update: 2021-08-10 18:43 GMT
விருதுநகர், 
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக காங்கிரஸ் கிளை அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கூறினார். 
ஆலோசனை கூட்டம்
விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர் தலைமையில் நடந்த நிர்வாகிகள்ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி, கிழக்கு மாவட்ட பார்வையாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இக்கூட்டத்தில் ஜான்சிராணி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை, பல்வேறு துணை அமைப்புகள், வட்டார மற்றும் கிராம கமிட்டிகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினார்.
கலந்தாய்வு 
இதையடுத்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:- 
காங்கிரஸ் தலைமை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் நகர, வட்டார மற்றும் கிராம கமிட்டிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து வருகின்றனர்.
 அந்த வகையில் நான் விருதுநகர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வருகிற 15-ந் தேதிக்குள் தற்போதைய நிர்வாகிகளின் பட்டியல் விவரங்களை தருமாறு கேட்டுள்ளேன். இந்த பட்டியல் மாநில தலைமைக்கு சமர்ப்பிக்கப்படும். இதனை தொடர்ந்து வட்டார மற்றும் கிராம கமிட்டிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அமைப்புகளை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நடவடிக்கை 
 குறிப்பாக இளைஞர்களையும், பெண்களையும் அதிக எண்ணிக்கையில் கட்சியில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூத் கமிட்டி அல்லாமல் கிராம கமிட்டி அளவில் அமைப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 இது ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வர உள்ள உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற  தேர்தல் ஆகியவற்றில் கட்சியின் செயல்பாடு சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் வகையில் தற்போது அடிப்படை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் வெயிலுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்