அதிவேக நெடுஞ்சாலை திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம். அதிக இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள பெங்களூரு- சென்னை அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவலம்
கருத்து கேட்பு கூட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள பெங்களூரு- சென்னை அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வள்ளிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, இத்திட்டத்தின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட அலுவலர் மோகன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிக இழப்பீடு வழங்க வேண்டும்
கூட்டத்தில் மகிமண்டலம், மேல்பாடி, வெப்பாலை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் பயன்படுத்தும் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்க கூடாது, விளை நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட அதிகம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்குவதில் கால தாமதம் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.