மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் இந்திய மருத்துவக்குழுவினர் ஆய்வு

விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய மருத்துவக்குழுவின் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-08-10 17:53 GMT
விருதுநகர், 
விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய மருத்துவக்குழுவின் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவக்கல்லூரி 
விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே ரூ.379 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமான பணி முடிவடைந்து உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று திட்டமிட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விதிமுறைப்படி இந்திய மருத்துவக்குழுவின் பிரதிநிதிகள் கல்லூரி கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைஆய்வு செய்து இந்திய மருத்துவக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்த பின் மருத்துவ இந்திய மருத்துவக் குழு திருப்தியடையும் பட்சத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அனுமதி வழங்குவது நடைமுறையில் உள்ளது.
ஆய்வு 
அந்த வகையில் நேற்று இந்திய மருத்துவக்குழுவின் பிரதிநிதிகளான பெல்லாரி, மருத்துவக்கல்லூரி உடற்கூறுவியல் பிரிவின் தலைவர் டாக்டர் மல்லிகார்ஜுன் மற்றும் இமாச்சல பிரதேசம் மருத்துவக்கல்லூரியின் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் விபின் ஆகியோர் கட்டிடத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்தனர்.
மருத்துவக்கல்லூரியில் உள்ள ஒவ்வொரு பிரிவாக சென்று மருத்துவக்குழுவின் சிறப்பு பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
 ஆய்வுக்குழுவினருடன் விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடன் சென்றனர்.
 வாய்ப்பு 
தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய 4 மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் தலா 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்கள் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ள நிலையில் விருதுநகர்மருத்துவகல்லூரிக்கும் ஆய்வுக்குழுவின் அறிக்கையை பெற்று இந்திய மருத்துவக்குழு அனுமதி அளிக்கும் நிலையில் இந்த மருத்துவக்கல்லூரியிலும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாக விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தெரிவித்தார்.
 மேலும் மருத்துவக்கல்லூரி கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட இந்திய மருத்துவக்குழுவினர் திருப்தி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்