சேந்தமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி-உறவினர்கள் சாலை மறியல்

சேந்தமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலியானார். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2021-08-10 17:46 GMT
சேந்தமங்கலம்:
விபத்து
சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 72). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு கருப்பண்ணன் துத்திக்குளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். 
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக கருப்பண்ணனின் உறவினர்கள் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், கருப்பண்ணன் மீது மோட்டார் சைக்கிளால் மோதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 
சாலை மறியல்
இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருப்பண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை உறவினர்கள் வாங்க சென்றபோது, சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாரின் சான்றிதழ் இருந்தால் தான் உடலை கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதனிடையே நேற்று இரவு கருப்பண்ணனின் உறவினர்கள், பொதுமக்கள் துத்திக்குளத்தில் ராசிபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டித்தும், கருப்பண்ணன் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய நபரை கைது செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். 
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்