தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2½ லட்சம் கடன்: உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு காசோலையுடன் வந்தவரால் பரபரப்பு

நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு காசோலையுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-10 17:46 GMT
நாமக்கல்:
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நாமக்கல் அருகே உள்ள மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ், மகாத்மா காந்தி போன்று வேடம் அணிந்து நேற்று நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவருடைய குடும்பத்திற்கான கடன் தொகை ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 976-க்கு காசோலை கொண்டு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று காசோலையை வழங்குமாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும். இந்த காசோலையை பெற்றுக்கொண்டு எனது குடும்பத்திற்கான கடன் பதிவேட்டின் நகலை தர வேண்டும். இந்த கடனை செலுத்த முன்வரும், வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் குடும்ப கடனாக கொடுத்து, குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து ஏழ்மையை போக்குவதற்கு உதவ வேண்டும் என்றார். 
இதையடுத்து காசோலையுடன் அவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் கலெக்டர் பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டதால், சிறிது நேரம் காத்திருந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் இன்று (புதன்கிழமை) கலெக்டரிடம் காசோலையை வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்