லாரி மோதி பெண் போலீஸ் பலி
சிவகாசியில் லாரி மோதி பெண் போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி,
சிவகாசியில் லாரி மோதி பெண் போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண் போலீஸ் பலி
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் மேலத்தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருடைய மனைவி முத்து முனீசுவரி (வயது 36). இவர் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அருகில் உள்ள விஸ்வநத்தம் ஊருக்கு வந்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் போலீஸ் நிலையம் திரும்பிக்கொண்டிருந்தார். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பன்னீர்தெப்பம் அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி, பெண் போலீஸ் முத்து முனீசுவரியின் இருசக்கர வாகனம் மீது திடீரென மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கைது
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்து முனீசுவரியின் உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த காரைக்காலை சேர்ந்த பாஸ்கர் (53) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான முத்து முனீசுவரிக்கு சக்தி வேல்பாண்டியன் (6), சிவசக்திபாண்டியன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட முத்து முனீசுவரி உடலுக்கு அவருடன் பணியாற்றிய சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.