உயர்கல்வி நிறுவனங்கள் கிராமங்களை தத்தெடுத்து நீர் மேலாண்மைக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

உயர்கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து நீர்மேலாண்மைக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்

Update: 2021-08-10 17:33 GMT

கள்ளக்குறிச்சி

பயிற்சி பட்டறை

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில், இந்திய அரசு கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வித்துறை ஆகியவை இணைந்து தூய்மை மேலாண்மை, நீர் மேலாண்மை, சூரிய சக்தி, பசுமை மேலாண்மை ஆகியவை தொடர்பாக மாவட்ட அளவிலான 2 மணி நேர பயிற்சி பட்டறை ஸ்வச்தா செயல் திட்டம் இணைய வழி மூலம் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் சிறப்பு அழப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

ஊக்கப்படுத்த வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல், குப்பைகளை தரம் பிரித்தல், சூரிய சக்தி, மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுத்த அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் தங்கள் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். 
மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து நீர் மேலாண்மைக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். 
இ்வ்வாறு அவர் கூறினார்.

கல்லூரிக்கு விருது

இந்த பயிற்சி பட்டறையில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுசிலின் வேண்டுகோளுக்கு இணங்க, தூய்மை மேலாண்மை, நீர் மேலாண்மை, சூரிய சக்தி, பசுமை மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கியமைக்காக எறையூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு ‘ஒரு மாவட்டம் ஒரு பசுமை சாம்பியன்’ என்ற விருதை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். 
இதில் தனியார் கல்லூரி முதல்வர் வில்லியம் சுரேஷ் குமார், துணை முதல்வர் சிந்தியா, தூய்மை செயல் திட்ட அலுவலர் நவீன்குமார், கல்லூரி பேராசிரியர் வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்