பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
ஆடிப்பூரத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று (புதன்கிழமை) தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா 3-ம் அலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நெரிசலான பகுதிகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆடி மாத கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூரம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.