திருப்பூர் மாவட்டத்தில் புறநானூற்று பாடலை விளக்கும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் புறநானூற்று பாடலை விளக்கும் 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:-
திருப்பூர் மாவட்டத்தில் புறநானூற்று பாடலை விளக்கும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலம்
தமிழகத்தில் தொல்லியல் மற்றும் வரலாற்று சான்றுகளை மிக வளமையாக கொண்டது கொங்கு மண்டலம் ஆகும். பண்டைய காலம் முதல் கால்நடை வளர்ப்பே இம்மக்கள் வாழ்க்கையில் பொருளீட்டும் வாழ்வியல் அடிப்படை ஆதாரமான நடவடிக்கையாக விளங்குகிறது. இங்கு நிலவும் சுற்றுச்சூழலும், கால்நடை வளர்ப்பிற்கு ஏற்றதாக இயல்பாகவே அமைந்துள்ளது. இங்குள்ள தரைப்பகுதி சிறு, சிறு ஓடைக்கல் கலந்த பூமியாக இருப்பதால் ஈரப்பசையை பாதுகாத்து வைத்திருக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.
எனவே கால்நடைகளுக்கு தீவனமான புல் இங்கு நன்கு வளர்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட மக்கள் அவற்றை வழிபட்டும் உள்ளனர். பெருங்கற்காலத்தில் வாழ்ந்த நமது மக்கள் கால்நடை வளர்ப்புடன் புஞ்சை வேளாண்மை பயிர்களையும் விளைவித்தனர். சோளம், சாமை, கம்பு, திணை, கேழ்வரகு ஆகிய புஞ்சை பயிர்களை பயிர் செய்தனர்.
புலி-பன்றி குத்திப்பட்டான் நடுகல்
எனவே பண்டைய மக்களின் பெருஞ்செல்வமாக கால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் விளங்கின. இந்த கால்நடை செல்வங்களை தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலியுடன் சண்டையிட்டு வீரமரணம் எய்திய வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள் புலிக்குத்திப் பட்டான் நடுகற்கள் எனவும், வேளாண்மை பயிர்களை தனக்கு உணவாக உட்கொள்ள வரும் காட்டுப்பன்றியுடன் போரிட்டு மாண்ட மாவீரன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள் பன்றிக்குத்திப் பட்டான் நடுகற்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுச்சாமி, ச.மு.ரமேஷ்குமார் மற்றும் ரா.செந்தில்குமார் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டம் பெரிய மோளரப்பட்டியில் மேற்கொண்ட கள ஆய்வின் போது புலி மற்றும் பன்றி குத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
புறநானூற்று பாடல்
இது பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-
சங்க கால தமிழ் மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுகின்ற நமது சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் (பாடல் எண் 260) தம் ஊரின் கால்நடை மற்றும் வேளாண் பயிர்களை பாதுகாக்க போரிட்டு வீர மரணம் எய்திய வீரரின் நினைவாக எடுக்கப்பெற்ற நடுகல்லில் அந்த மாவீரனின் புகழ் பொறிக்கப்பெற்று அந்த வீர நடுகல்லுக்குப் பந்தல் போட்டுப்பூச்சூடி பழந்தமிழ் மக்கள் வழிபட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் ஏறத்தாழ 1,800 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்ததை நாம் பெரிய மோளரப்பட்டி நடுகல் மூலம் அறிய முடிகிறது. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் கி.பி. 17-ம் நூற்றாண்டில் சுக்கல வருஷம் ஆடி மாதம் 18-ந்தேதி குருசாமி துரை பட்டத்தில் மோழரப்பட்டி, வெங்கட்ட நாயக்கர் மகள் ஆண்டி அம்மாள் மக்கள் தூண் நட்டு, கம்புதட்டுகளால் பந்தல் போட்டு நடுகல்லை வழிபட்ட செய்தியை நாம் அறிய முடிகிறது.
நடுகல் அமைப்பு
195 செ.மீ. அகலமும், 95 செ.மீ. உயரமும் கொண்ட இந்த நடுகல்லில் இடதுபுறம் உள்ள வீரமறவன் தன் இடதுகையில் பன்றியின் வாய்ப் பகுதியை பிடித்து தன் வலது கையில் உள்ள ஈட்டி மூலம் பன்றியின் தலைப் பகுதியை குத்தும் வகையிலும், தன் இடது தோளில் வில்லை மாட்டியும், தன் வலது தோளில் அம்புகள் வைப்பதற்காக அம்புக்கூடும் வைத்துள்ளார். வலதுபுறம் உள்ள மாவீரன் தன் இடது கையில் புலியின் வலது காலைப்பிடித்து தன் வலது கையில் உள்ள ஈட்டி மூலம் புலியின் முதுகுபகுதியை குத்தும் வகையிலும், இந்த வீர நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரு வீரர்களின் அள்ளி முடிந்த குடுமியும் இடதுபுறம் சாய்ந்துள்ளது. இடையில் மட்டும் ஆடை அணிந்து காது, கழுத்து, கை, கால்களில் அணிகலன்களும் அணிந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெண் தனது வலது கையை உயர்த்தி அதில் ஒரு பூவை பிடித்த படியும், தனது இடது கையை தொங்கவிட்ட நிலையிலும் காணப்படுகிறார். இந்த வீர நடுகல்லில் ஒர் குடுவையும் காட்டப்பட்டுள்ளது. இவ்வீரர்களுக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரு பக்கமும் தீபம் வைப்பதற்காக வேல் போன்ற அமைப்பில் காட்டப்பட்டுள்ளதன் மூலம் பண்டைய தமிழ் மக்கள் நடுகற்களுக்குப் பந்தல் போட்டு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்துள்ளதை நாம் மிக நன்கு அறிய முடிகிறது. சிலை அமைப்பை வைத்துப்பார்க்கும் போது இந்த நடுகல் கி.பி.17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.