ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி?

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் அதற்கு தகுதியானதாக உள்ளதா என தேசிய மருத்துவ கவுன்சில் குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2021-08-10 16:45 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் அதற்கு தகுதியானதாக உள்ளதா என தேசிய மருத்துவ கவுன்சில் குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மருத்துவ கல்லூரி
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.455 கோடியில் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரில் கட்டிடமும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, நரம்பியல், இருதயவியல், சிறுநீரகவியல் ஆகிய 3 புதிய துறைகள் உருவாக்கப்பட்டு அதற்கென துறை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 5 ஆண்டுகளுக்கு தலா 150 மாணவர்களின் கல்வி வசதிக்காக 750 நோயாளிகள் படுக்கை வசதிகள் இருக்க வேண்டிய நிலையில் தற்போதே அரசு ஆஸ்பத்திரியில் 800 படுக்கை வசதி உள்ளது. 
மருத்துவ கவுன்சில் குழு 
இதுதவிர, கூடுதல் சிறப்பு வகுப்புகளுக்கான படுக்கை வசதி அறைகள் கட்டும் பணி ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. மேலும், விரிவுரையாளர்கள் அறை, பிரேத பரிசோதனை அறை, டாக்டர்கள் குடியிருப்பு என 5 கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவ கல்லூரியில் விரைவாக கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று தேசிய மருத்துவ கவுன்சில் குழு அதிகாரிகள் 3 பேர் குழு தலைவர் அனுமந்த பிரசாத் தலைமையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு திடீரென்று வந்தனர். இவர்கள் மருத்துவ கல்லூரி கட்டிடம், கட்டுமான பணிகள், கட்டமைப்புகள், தரம், பாடம் நடத்துவதற்கான பேராசிரியர்கள், ஆய்வக வசதிகள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்தனர். இந்த ஆய்வின்போது மாணவர் சேர்க்கைக்கு தகுதியானதாக உள்ளதா என்று ஆராய்ந்தனர். மேலும், மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்டோரிடம் அதுதொடர்பான விவரங்களை கேட்டறிந்தனார்.
அனுமதி
 ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமானம் மற்றும் நிர்வாக வசதி உள்ளிட்ட விவரங்கள் டெல்லியில் உள்ள மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்று மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு முடித்துள்ள நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரத்திற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ராமநாதபுரத்தில் முதல் ஆண்டில் 150 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

மேலும் செய்திகள்