வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-10 16:26 GMT
விருத்தாசலம், 

நிலப்பிரச்சினை

விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 35). இவர் நேற்று முன்தினம் அதேஊரில் உள்ள மோட்டார் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்தகுமார் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மனைவி மகாலட்சுமி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவருக்கும், புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த தனிநபர்கள் சிலருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. 

சாவில் சந்தேகம் மனைவி புகார்

எங்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, எனது கணவரிடம் எழுதி வாங்க முயற்சி செய்து வந்ததோடு, எனது கணவரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டலும் விடுத்து வந்தனர். இதனால் மனமுடைந்த எனது கணவர் கடந்த 9-ந்தேதி வயலுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பிறகு ஆனந்தகுமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. இதனால் பதறிய நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஆகவே கணவர் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் புகாரை வாங்கிய போலீசார் வழக்குப்பதியவில்லை என கூறப்படுகிறது. 

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆனந்தகுமாரின் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், அவருடைய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைபார்த்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்ற மகாலட்சுமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு துண்டியதாக கணவன்-மனைவி கைது

இதற்கிடையே ஆனந்தகுமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அதேஊரை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, முருகேசன்(56), அவருடைய மனைவி ராஜேஸ்வரி(50) ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்