கடமலை-மயிலை ஒன்றியத்தில் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வினியோகம்; விவசாயிகள் தவிப்பு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Update: 2021-08-10 16:02 GMT
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், தென்னை, முருங்கை, கரும்பு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தில் கிணறு அமைத்து, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். விவசாயிகளின் வசதிக்காக நாள் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு, குமணன்தொழு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த 3 மணி நேர மும்முனை மின்சாரமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நாள் முழுவதும் தோட்டங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
தற்போது கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் மழை அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் தண்ணீரின்றி பயிர்களும் வெயிலில் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
மேலும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்