கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கியது
கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கியது. இதில் 85 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
கோவை,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள மாநிலங்களில் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது.
இதற்காக நேற்று முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்லூரிக்கு பணிக்கு திரும்புமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.
கோவை அரசு கலைக்கல்லூரிக்கு நேற்று பேராசிரியர்கள் வழக்கம்போல் வந்து இருந்தனர். பின்னர் அவர்கள் முதலாமாண்டு தவிர பிற மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் பணியை தொடங்கினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறும்போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர பிற இளநிலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறுகிறது.
ஒரு பாடம் நடத்தி முடித்தவுடன் 10 நிமிடம் இடைவெளி விடப்படுகிறது. ஜும் ஆப் என்ற செயலி மூலம் கல்லூரி பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் லிங் அனுப்புவார்கள்.
அந்த லிங்கை கிளிக் செய்தால் ஆன்லைனில் வகுப்பில் இணைந்து கொள்ளலாம். முதல் நாளான நேற்று 85 சதவீதம் மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.