கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்- சாலைகள் வெறிச்சோடின
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாலையில் சாலைகள் வெறிச்சோடின.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாலையில் சாலைகள் வெறிச்சோடின.
கடைகள் அடைப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளையும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார். இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
கடைகளின் ஊழியர்கள் மாலையிலேயே தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள். மேலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இதனால் நேற்று மாலையில் இருந்தே முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பார்சல் சேவை
உணவகங்களில் மாலை 5 மணிக்கு வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கப்பட்டன.இதேபோல் டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
டீக்கடைகளும் மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டன. ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, நேதாஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால், அந்த பகுதி வெறிச்சோடி கிடந்தன.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.