கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; 99.99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கர்நாடகத்தில் 8¾ லட்சம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 99.99 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-08-09 20:53 GMT
 பெங்களூரு:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் தொட்ட பாதிப்பும், பலியும் தற்போது குறைந்துவிட்டது. இருப்பினும் 2-வது அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை. இதனால் நடப்பாண்டு பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கடந்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. வருகிற 23-ந்தேதி முதல் கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு முதல் பி.யூ.சி. 2-ம் ஆண்டு வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

  இதற்கிடையே கொரோனா பரவலுக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த ஜூலை மாதம் 19 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெற்றது. 2 பாடங்களாக சுருக்கப்பட்டு, விடைகளை தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. பலத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்வை நடத்த முன்னாள் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்பாடுகளை செய்தார்.

முடிவு வெளியீடு

  எந்த சிக்கலும் இன்றி அந்த தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த விடைத்தாள்களை திருத்தும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

  கர்நாடகத்தில் 99.99 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவி தோல்வி

  கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. மொத்த பாடங்கள் 2 ஆக சுருக்கப்பட்டு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 443 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று உள்ளனர். 99.99 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒரே ஒரு மாணவி தோல்வி அடைந்துள்ளார்.

  தேர்வு எழுதிய 4 லட்சத்து 70 ஆயிரத்து 161 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதிய 4 லட்சத்து ஆயிரத்து 282 பேரில் 4 லட்சத்து ஆயிரத்து 281 மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். ஒரே ஒரு மாணவி மட்டும் தோல்வி அடைந்தார். அவர் தேர்வு எழுதவரவில்லை.

157 பேர் 625-க்கு 625 மதிப்பெண்

  இதில் 16.52 சதவீதம் பேர் ஏ பிளஸ் கிரேடிலும், 32.07 சதவீதம் பேர் ஏ கிரேடிலும், 36.86 சதவீதம் பேர் பி கிரேடிலும், 14.55 சதவீதம் பேர் சி கிரேடிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  157 மாணவர்கள் 625-க்கு 625 மதிப்பெண்களும், 289 மாணவர்கள் 623 மதிப்பெண்களும், 2 மாணவர்கள் 622 மதிப்பெண்களும், 449 மாணவர்கள் 621 மதிப்பெண்களும், 28 மாணவர்கள் 620 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவர்கள் 625 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

தனித்தேர்வர்கள்

  நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று இரு தரப்பு மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னடம், ஆங்கிலம், உருது, மராட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மொழியில் (கன்னடம்)25 ஆயிரத்து 702 மாணவர்கள் 125-க்கு 125 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர், 2-வது மொழியில் (ஆங்கிலம்) 36 ஆயிரத்து 628 மாணவர்களும், 3-வது மொழியில் (பிற தாய்மொழி) 36 ஆயிரத்து 776 மாணவர்களும், கணிதத்தில் 6,321 மாணவர்களும், அறிவியலில் 3,649 மாணவர்களும், சமூக அறிவியலில் 9,367 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

  பெங்களூரு நகரம் முதல் பல்லாரி வரை 34 கல்வி மாவட்டங்களும் ஏ கிரேடு இடத்தை பிடித்துள்ளன. மாற்றுத்திறனாளிகள் 4,626 பேர் தேர்வுக்கு ஆஜராகினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனித்தேர்வர்கள் பிரிவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 126 பேர் தேர்வு எழுதினர். இதில் 126 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,267 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 4,715 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பள்ளி-கல்லூரிகளை திறக்க முடிவு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு (அதாவது பி.யூ.சி.) வரை பள்ளி-கல்லூரிகளை வருகிற 23-ந் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனியாக கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

  இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த வழிகாட்டுதலை அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இந்த மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும்.
  இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

பசவராஜ் பொம்மை வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி நடத்திய தேர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், பெற்றோருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். 

அதே போல் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை பாராட்டுகிறேன். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்தடுத்து வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்