வெளிமாநில பெண்களை விபசாரத்தில் தள்ளிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
பெங்களூருவில் வேலை கொடுப்பதாக கூறி அழைத்து வந்து வெளிமாநிலங்களை சேர்ந்த பெண்களை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
குண்டர் சட்டத்தில் கைது
மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் என்ற சரத் (வயது 28). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து விபசார தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் நவீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார், இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீலிடம் அனுமதி கேட்டு இருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நவீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நவீனை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளி மாநிலங்களை சேர்ந்த...
அதாவது வெளிமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்கள், பெண்களிடம் வேலை கொடுப்பதாக பெங்களூருவுக்கு அழைத்து வந்து, அவர்களை விபசார தொழிலில் ஈடுபடுத்தி நவீன் பணம் சம்பாதித்து வந்துள்ளார். விபசார தொழில் நடத்தியதாக ஏற்கனவே நவீனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜெயநகர், ஜே.பி.நகர், குமாரசாமி லே-அவுட், பானசாவடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பின்பு மீண்டும் அவர் விபசார தொழில் செய்து வந்துள்ளார்.
சில பெண்களை, ஓட்டல், தனியார் தங்கும் விடுதிகள், வாடகை வீடுகளில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தும், அவர்களை மிரட்டியும் விபசாரத்தில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும், அவர் விபசார தொழிலை கைவிடாததால் குண்டர் சட்டத்தின் கீழ் நவீன் கைது செய்யப்பட்டு இருப்பதாக இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.