கோமாவில் இருக்கும் மகனுடன் ஆம்புலன்சில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்

விபத்தில் காயம் அடைந்து 6 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் மகனுடன் உதவி கேட்டு ஆம்புலன்சில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு பெண் வந்தார். அவர் தனது மகனை காப்பாற்ற மருத்துவ உதவி, இழப்பீடு கேட்டு மனு அளித்தார்.

Update: 2021-08-09 20:28 GMT
தஞ்சாவூர்;
விபத்தில் காயம் அடைந்து 6 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் மகனுடன் உதவி கேட்டு ஆம்புலன்சில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு பெண் வந்தார். அவர் தனது மகனை காப்பாற்ற மருத்துவ உதவி, இழப்பீடு கேட்டு மனு அளித்தார்.
லாரி டிரைவர் மகன்
தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு அருகே உள்ள பொட்டுவாச்சாவடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 57). லாரி டிரைவர். இவருடைய மனைவி லாரன்ஸ் மேரி. இவர்களுக்கு சுபா என்ற மகளும், அலெக்சாண்டர், ஸ்டாலின் (23) என்ற மகன்களும் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகனான ஸ்டாலின், திருச்சியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். தொழிற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் ரெயிலில் சென்று வந்தார். இதற்காக அவர் வீட்டில் இருந்து தஞ்சை ரெயில் நிலையம் வரை சைக்கிளில் வந்து விட்டு அங்கிருந்து ரெயிலில் சென்று வருவார்.
கார் மோதியதில் கோமா நிலை
இந்த நிலையில, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வழக்கம்போல் தொழிற்பயிற்சி நிலையம் செல்வதற்காக சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தார். 
தஞ்சை சேவியர் நகர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் ஸ்டாலின் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஸ்டாலின் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறி உள்ளனர்.
இழப்பீடு கேட்டு வழக்கு
இதனைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 
ஆனால் கோர்ட்டு தீர்ப்பை 2 ஆண்டுகள் கழித்து வக்கீல், 30 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என கூறி, பணத்தை செலுத்தினாலும் ரூ.30 லட்சம் வருவது சந்தேகம் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவில்லை.
ஆம்புலன்சில் வந்தார்
இதையடுத்து ஸ்டாலினுக்கு நண்பர்கள், உறவினர் மூலமாக இதுவரை ரூ.18 லட்சம் வரை மருத்துவ செலவு செய்தும், உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து பெற்றோர் தரப்பில், கடந்த சில ஆண்டாக மகனுக்கு மருத்துவ உதவி வேண்டி, பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் கோமாவில் உள்ள மகனை ஆம்புலன்ஸ்சில் நேற்று அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தாய் லாரன்ஸ் மேரி, மீண்டும் மனு அளித்தார். 
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசு உதவ கோரிக்கை
ஸ்டாலினுக்கு விபத்து ஏற்பட்ட நாளில் இருந்து பல இடங்களில் சிகிச்சை அளித்து விட்டோம். தற்போது பிசியோதெரபி ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு சிகிச்சை அளித்து செல்கிறார். அவருக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், அவர் கொடுக்கும் மருந்துக்கு மாதம் ரூ.4,500-ம் செலவாகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் அதற்கு சிரமாக உள்ளது.
கோமாவில் இருக்கும் ஸ்டாலின் மருத்துவ செலவிற்காக எனது மூத்த மகன் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். வருங்காலத்தில் ஸ்டாலினுக்கு மருத்துவ செலவு செய்யமுடியாத சூழலில் உள்ளோம். எனவே அரசு சிறப்பு டாக்டர் ஒருவரை நியமித்து சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். முறையாக விபத்து தொடர்பான வழக்கை அரசு சார்பில் நடத்தி இழப்பீடு தொகையை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்