பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை; ரூ.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-09 20:28 GMT
பெங்களூரு:

ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்

  பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் மாலையில் போதைப்பொருட்களை 2 பேர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக இன்ஸ்பெக்டர் குமாரசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு குமாரசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர்களிடம் சோதனை நடத்திய போது போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  அவற்றை விற்பனை செய்ய 2 பேரும் சுற்றி திரிந்ததும் தெரிந்தது. இதையடுத்து, 2 வாலிபர்களையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பப்புராம் என்ற பப்பு (வயது 20), சுனில் (20) என்பதும், பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திபெலேயில் 2 பேரும் வசித்து வருவதும் தெரியவந்தது.

ரூ.2 கோடி போதைப்பொருட்கள்

  இவர்கள் 2 பேரும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருட்களை கடத்தி வருவார்கள். பின்னர் அந்த போதைப்பொருட்களை, கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சிறு, சிறு பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து 2 பேரும் விற்றுள்ளனர். எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் 2 பேரும் போதைப்பொருட்களை விற்பனை செய்திருக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக போலீசாரிடம் சிக்காமல் 2 பேரும் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

  கைதானவர்களிடம் இருந்து 859 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 1 கிலோ 621 கிராம் பிரவுன் சுகர், 1¾ கிலோ கஞ்சா, 1 கிலோ மிக்சிங் பவுடர், ஒரு மோட்டார் சைக்கிள், கார், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2 கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பப்புராம், சுனில் மீது சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீப் எம்.பட்டீல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்