உயர் அழுத்த மின்கம்பிகள் சென்ற பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்க கூடாது; நடிகர் அஜய்ராவ் பேட்டி
யார் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு கூற விரும்பவில்லை என்றும், உயர் அழுத்த மின் கம்பிகள் சென்ற பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்க கூடாது எனவும் நடிகர் அஜய்ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சண்டை கலைஞர் சாவு
ராமநகர் மாவட்டம் பிடதியில் நேற்று நடைபெற்ற லவ் யூ ரச்சு படத்தின் படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி தமிழ்நாட்டை சண்டை கலைஞர் விவேக் உயிர் இழந்திருந்தார். இந்த படப்பிடிப்பின் போது நடிகர் அஜய்ராவும் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்திருந்தார்.
இதுகுறித்து நடிகர் அஜய் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நேரில் பார்க்கவில்லை
என்னுடைய படத்தின் (லவ் யூ ரச்சு) படப்பிடிப்பு பிடதியில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. மழை காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. மழை குறைந்ததை தொடர்ந்து இன்று (அதாவது நேற்று) படப்பிடிப்பு நடந்தது. முதலில் நான் நடிக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அதுமுடிந்ததும் அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் மின்சாரம் தாக்கி விவேக்கும், ரஞ்சித்தும் பலத்தகாயம் அடைந்திருந்தனர். இந்த தகவலை என்னுடைய உதவியாளர் தான் வந்து தெரிவித்தார். சம்பவத்தை நான் நேரில் பார்க்கவில்லை. பொதுவாக சண்டை காட்சியை படமாக்கும் போது, அங்கு எந்த விதமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதை சண்டை மாஸ்டர், இயக்குனர், உதவி இயக்குனர் கவனிப்பார்கள்.
யார் மீதும் குற்றச்சாட்டு...
ஆனால் இந்த படத்தின் சண்டை காட்சியை படமாக்கும் போது உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதை எப்படி கவனிக்காமல் விட்டனர் என தெரியவில்லை. விவேக் சாவுக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் குற்றச்சாட்டு கூற விரும்பவில்லை. உயர் அழுத்த மின்கம்பிகள் செல்லும் பகுதியில் வைத்து சண்டை காட்சிக்கான படப்பிடிப்பை நடத்தி இருக்க கூடாது. இதில், படக்குழுவினர் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
விவேக் நல்ல கலைஞர். அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என்றே தெரியவில்லை. இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. விவேக் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கூடிய விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நடிகர் அஜய் ராவ் கூறினார்.
கலந்து கொள்ள மாட்டேன்
இதுகுறித்து நடிகை ரஷிதாராம் நிருபர்களிடம் கூறுகையில், லவ் யூ ரச்சு படத்தில் நான் நடித்து வருகிறேன். தற்போது படப்பிடிப்பின் போது விவேக் மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரம் நடந்திருக்க கூடாது. அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று சொன்னால் யார் கேட்பார்கள்.
மின்சாரம் தாக்கி பலியாகி உள்ள விவேக்குக்கு நியாயம் கிடைக்கும் வரை லவ் யூ ரச்சு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன். விவேக்குடன், நான் பேசி பழகியதில்லை. அவரது சாவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, என்றார்.