வங்கியில் கல்விக்கடன் வழங்க அலைக்கழிப்பு; கலெக்டரிடம் பெண் புகார்
வங்கியில் கல்விக்கடன் வழங்க அலைக்கழிப்பு செய்வதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.
தேனி:
வங்கியில் கல்விக்கடன் வழங்க அலைக்கழிப்பு செய்வதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனிடம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்படி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்து, கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அழகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து நிறுவனங்களிலும் பணி புரியும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கவுரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் பாண்டி, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "உத்தமபாளையம் ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி இந்திரா காலனி, டி.சொக்கநாதபுரம் ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இடஒதுக்கீடு அரசாணை
இதேபோல், தமிழ்நாடு வீரசைவ பேரவை மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வீரசைவர், பண்டாரம் உள்ளிட்ட 22 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வீரசைவர் என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 115 சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும், நோயாளிகளை அலைக்கழிக்கக்கூடாது என்றும் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் புரட்சி ரெட் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கல்விக்கடன்
தேனி அருகே அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஜெயசித்ரா, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "நான் கணவரால் கைவிடப்பட்டவர். எனக்கு 2 மகன்கள். அவர்கள், தேனியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்புக்காக கல்விக்கடன் கேட்டு 2 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அலைக்கழிப்பு செய்கின்றனர். எனவே, எனது மகன்களின் கல்வி தொடர கல்விக்கடன் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.