மாகியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
புதிதாக 63 பேருக்கு தொற்று பாதித்துள்ள நிலையில் மாகி பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி, ஆக.10-
புதிதாக 63 பேருக்கு தொற்று பாதித்துள்ள நிலையில் மாகி பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.
பரிசோதனை
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 677 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 63 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 182 பேர், வீடுகளில் 652 பேர் என 834 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 78 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.
மாகியில் அதிகரிப்பு
புதுவை பிராந்தியத்தில் 44 பேர் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் சிறிய பிராந்தியமான மாகியில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தினமும் 10 பேருக்கு குறையாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தொற்று பாதிப்பு அதிகமுள்ள கேரள மாநிலத்தையொட்டி மாகி பிராந்தியம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.84 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 9 பேரும், முன்களப் பணியாளர்கள் 5 பேரும், பொதுமக்கள் 1,268 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 344 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளது.