மடத்துக்குளத்தில் உரத்தட்டுப்பாடு
மடத்துக்குளம் பகுதியில் குறிப்பிட்ட உரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் குறிப்பிட்ட உரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆடிப்பட்டம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஆடிப் பட்டத்தில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது ஒருசில உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உரிய பருவத்தில் போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
அமராவதி அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக நீடித்து வருவதால் மடத்துக்குளம், கடத்தூர், கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலாம் போகத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தென்மேற்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டும் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகசூல் இழப்பு
பொதுவாக அனைத்து விதமான பயிர்களுக்கும் உரிய பருவத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களை வழங்குவதன் மூலமே மகசூலை அதிகரிக்க முடிகிறது. குறிப்பாக தானியம் மற்றும் பருத்திப் பயிர்களில் நாற்று நடுவதற்கு முந்தைய சாகுபடியில் இறுதி நிலையில் யூரியா பயன்படுத்தப்படுகிறது. கரும்புப் பயிரில் கரும்பை நடவு செய்த பிறகு பக்க உரமாகப் போடுவது நல்லது. இதுபோல தற்போது மக்காச்சோளம் மற்றும் நெல் பயிரில் யூரியா இட வேண்டிய பருவத்தில் உள்ளது. ஆனால் மடத்துக்குளம் பகுதியில் போதுமான அளவில் யூரியா இருப்பு இல்லை. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தோம்.அப்போது அதிகாரிகள் மாவட்டத்தில் போதிய அளவில் இருப்பு உள்ளது.விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால் தற்போது வரை தட்டுப்பாடு தொடர்கிறது.இதனால் பயிர்களுக்குத் தேவையான ஊட்டம் கிடைக்காமல் கடுமையான மகசூல் இழப்பை விவசாயிகள் சந்திக்கும் அபாயம் உள்ளது.எனவே உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.