தூத்துக்குடியில் முச்சந்தி இசக்கியம்மன் கோவில் இடித்து அகற்றம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

தூத்துக்குடியில் நேற்று முச்சந்தி இசக்கியம்மன் கோவில் மாநகராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2021-08-09 13:16 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று முச்சந்தி இசக்கியம்மன் கோவில் மாநகராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டது.
இசக்கியம்மன் கோவில்
தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன் கோவில், சுடலை ஆண்டவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பா.ஜனதா கட்சியினர் திரண்டு வந்து கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவில் இடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இடித்து அகற்றம்
இந்த நிலையில் நேற்று காலையில் முச்சந்தி இசக்கியம்மன் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது. 
மாநகராட்சி உள்ளூர் திட்ட குழுமம் பொறியாளர் ரெங்கநாதன், மாநகராட்சி உதவி ஆணையர் ராமச்சந்திரன், காந்திமதி ஆகியோர் மேற்பார்வையில் ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் கோவில் இடிக்கப்பட்டது. 
அப்போது கோவிலில் இருந்த சிலைகள் சேதமடையாமல் அகற்றப்பட்டன. கோவில் இடிக்கும் பணி நடைபெற்றதையொட்டி தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்