தூத்துக்குடி அருகே விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னமணி. இவரது மகன் பட்டு ராஜா (வயது 37). விவசாயி. இவரது முதல் மனைவி ஆதியை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இதனால் இவரது உறவினர்கள் தங்கம் என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து வைத்தனர். இந்தநிலையில் பட்டுராஜாவுக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குடிபோதையில் வந்த பட்டு ராஜா மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கம் அடுத்த வீட்டில் வசித்து வரும் தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அவரும், மருமகளை தனது வீட்டில் இரவு தங்க வைத்துள்ளார். நேற்று காலையில் வீட்டுக்கு வந்த தங்கம் பட்டுராஜா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.