வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 லட்சம் டன் நிலக்கரி மாயமா? மின்வாரிய அதிகாரிகள் விசாரணை

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி விட்டதாக தகவல் வெளியானதால் மின்வாரிய அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Update: 2021-08-09 05:16 GMT
வடசென்னை அனல்மின் நிலையம்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த அனல் மின் நிலையங்களுக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கன்வேயர் பெல்ட் வழியாக வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும் மற்றொரு கன்வேயர் பெல்ட் வழியாக திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தனியார் மின் நிலையங்களுக்கும், இதர நிறுவனங்களுக்கும் லாரிகள் மூலம் நிலக்கரி அனுப்பப்படுகிறது.

நிலக்கரி மாயமா?
இவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கரியை துகள்களாக மாற்றி கொதிகலனில் செலுத்தப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய 3 ஆயிரத்து 500 டன் நிலக்கரி தேவைப்படுகிறது.இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலக்கரி கையாளும் பிரிவு அதிகாரிகள் கிடங்கில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 3.68 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டிய சூழ்நிலையில், 2 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருந்ததாகவும், 1.68 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே 2 லட்சம் டன் நிலக்கரி மாயமானதா? அல்லது மின்உற்பத்திக்கு கூடுதலாக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தமிழக மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்