கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: சேலம் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்- ஜவுளி, நகைக்கடை, வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்கு மேல் செயல்பட தடை

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதன்படி ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்கு மேல் செயல்பட மாவட்ட கலெக்டர் கார்மேகம் தடை விதித்துள்ளார்.

Update: 2021-08-08 22:41 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதன்படி ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்கு மேல் செயல்பட மாவட்ட கலெக்டர் கார்மேகம் தடை விதித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் இருந்தாலும் நோய் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலை கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரம் (23-ந் தேதி வரை) நீட்டிக்கப்படுகிறது. அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்றை கட்டுக்குள் வைக்கும் வகையில் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படும்.
6 மணி வரை செயல்பட அனுமதி
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், இவை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. சேலம் செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி ரோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வ.உ.சி. மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
மீன் சந்தைகள்
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.  விதிமுறைகளை பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
எனவே, சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கினை பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கொங்கணாபுரம் மற்றும் வீரகனூர் வாரச்சந்தைகள் வருகிற 23-ந் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மேலும் மேட்டூர் அணை பூங்காவுக்கு வருகிற 23-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்