மகன் சாவில் சந்தேகம் என்று தந்தை கோர்ட்டில் மனு: புதைக்கப்பட்ட வாலிபர் உடல் 8 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை- அந்தியூர் அருகே பரபரப்பு

அந்தியூர் அருகே மகன் சாவில் சந்தேகம் என்று தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததால், புதைக்கப்பட்ட வாலிபர் உடல் 8 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-08-08 21:54 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே மகன் சாவில் சந்தேகம் என்று தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததால், புதைக்கப்பட்ட வாலிபர் உடல் 8 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 
வாலிபர் உடல் அடக்கம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). அவருடைய மனைவி தேன்மொழி. இவர்களுடைய மகன் சாமிநாதன் (22). மூர்த்தி குடும்பத்தினருடன் ஆப்பக்கூடல் அருகே கள்ளியூர் என்ற கிராமத்தில் உள்ள செங்கல் தயாரிக்கும் சூளையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் சாமிநாதன் கடந்த மாதம் 31-ந் தேதி இரவு செங்கல் தயாரிக்கும் இடம் அருகே தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை மறுநாள் காலை பார்த்த மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் சாமிநாதனின் உடலை தூக்கில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
தோண்டி எடுக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து மூர்த்தி கடந்த 6-ந் தேதி பவானி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து கோர்ட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து கோர்ட்டு வழக்கை விசாரித்து புதைக்கப்பட்ட சாமிநாதனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்தியூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் தாசில்தார் விஜயகுமார் தலைமையில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், அந்தியூர் வருவாய் ஆய்வாளர் உமா மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி டாக்டர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர், இறந்த சாமிநாதனின் தந்தை மூர்த்தி ஆகியோர் நேற்று மாலை 4.30 மணி அளவில் சாமிநாதன் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
பிரேத பரிசோதனை
பின்னர் மூர்த்தி தனது மகன் சாமிநாதன் புதைக்கப்பட்ட இடத்தை ஊராட்சி பணியாளரிடம் காண்பித்தார். அதைத்தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி யாரும் வராதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் அந்த இடத்தை தோண்டி சாமிநாதனின் உடலை மேலே எடுத்தனர். அப்போது சாமிநாதன் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அது அவர் தான் என்பதை மூர்த்தி மற்றும் உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர் அதே இடத்தில் வைத்து சாமிநாதனின் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய தொடங்கினர். 3 மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது. அதன்பின்னர் மீண்டும் அதே இடத்தில் சாமிநாதனின் உடல் புதைக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறும்போது, ‘சாமிநாதனின் உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அறிக்கை வந்தபின்னரே சாமிநாதன் எப்படி இறந்தார்? என்று தெரியவரும்’ என்றனர்.
இறந்து 8 நாட்களுக்குப் பின்னர் வாலிபரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்