‘கேபினட் மந்திரி அந்தஸ்து வேண்டாம்'; பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா கடிதம்
‘கேபினட் மந்திரி அந்தஸ்து வேண்டாம்' என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கி கர்நாடக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன் மூலம் எடியூரப்பாவுக்கு அரசு பங்களா, கார் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அவர் தற்போது தங்கியுள்ள காவேரி பங்களாவில் தொடர்ந்து தங்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வேண்டாம் என்று கூறி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசு நேற்று முன்தினம் ஒரு உத்தரவை பிறப்பித்து முன்னாள் முதல்-மந்திரியான எனக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்குவதாக தெரிவித்துள்ளது. மந்திரிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-மந்திரிக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் மட்டும் வழங்கினால் போதும். அதனால் கேபினட் மந்திரி அந்தஸ்து உத்தரவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறனே்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.