திருச்சியில் ஒரு வாரத்தில் 33 சிறுவர், சிறுமியர் கொரோனாவால் பாதிப்பு
திருச்சியில் ஒரு வாரத்தில் 33 சிறுவர், சிறுமியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி,
திருச்சியில் ஒரு வாரத்தில் 33 சிறுவர், சிறுமியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா 3-ம்அலை
இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வெகுவாக குறைந்த நிலையில், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை. ஆனாலும் முன்னேற்பாடாக மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் 3-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் சில ஆயத்தப்பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை ஒரு வார காலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 448 பேர். அவர்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 14 பேர், சிறுவர்கள் 19 பேர் என 33 பேர் ஆவர். அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் 214 பேரும், ஆண்கள் 201 பேரும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர்.
குறிப்பாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 18, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 45, பொன்மலை கோட்டத்தில் 70, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 26 பேர் என 159 பேர் கடந்த ஒருவாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். இதுதவிர புறநகர் பகுதியில் உள்ள 14 வட்டாரங்களிலும் 281 பேரும், இதர மாவட்டத்தில் 8 பேரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர்.