முத்தாரம்மனுக்கு 1,008 லட்டுகளால் சிறப்பு அலங்காரம்
நெல்லை கொக்கிரகுளத்தில் முத்தாரம்மனுக்கு 1,008 லட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளத்தில் குருசாமி சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூரம் மற்றும் முளைப்பாரி விழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் முளைப்பாரி வித்திடுதல் நடைபெற்றது. தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 6-ந்தேதி வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.
நேற்று ஆடி அமாவாசை தினத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலை வலம் வந்து வழிபட்டனர். மேலும் குருசாமி, முத்தாரம்மன் சிலைகளுக்கும், உற்சவர் சிலைக்கும் 1,008 லட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் இரவு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், விழாக்குழு தலைவர் சிவ மகாலிங்கம், நிர்வாகிகள் முத்துசண்முகம், சங்கரநாராயணன், கணபதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.