கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 பேர் கைது
கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தின் முனியப்பர் கோவில் அருகே சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அப்போது அவ்வழியே சென்ற தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார், 2 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்து இருந்த பையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன், சிந்தனைச்செல்வன் என்பதும், அப்பகுதியில் உள்ள முந்திரி காடுகள் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகரங்களை தாண்டி கிராமப் புறங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.