வேலி அமைத்த தகராறில் முதியவர் மீது தாக்குதல்; 8 பேர் கைது
வேலி அமைத்த தகராறில் முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
தகராறு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு(வயது 62). இவருக்கு சொந்தமான நிலத்திற்கு கள்ளிவேலியை அகற்றி விட்டு கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தங்கராசு நிலத்திற்கு அருகில், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது.
இந்நிலையில் உமாபதி என்பவர் உள்ளிட்ட சிலர், தங்கராசுவை தகாத வார்த்தைகளால் திட்டி கோவில் பக்கத்தில் உள்ள கள்ளி வேலிகளை ஏன் அகற்றுகிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாலுசேகர் (52) என்பவர் தாக்கியதில், தங்கராசுவின் பற்கள் உடைந்து விழுந்ததாகவும், பின்னர் அருகில் இருந்த கட்டையால் தொடர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதை தடுக்க வந்த தங்கராசுவின் மனைவி நாகவள்ளியை உமாபதி உள்ளிட்டோர் தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
8 பேர் கைது
இதில் காயமடைந்த தங்கராசு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தங்கராசு தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் 9 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து உமாபதி (67), அண்ணாதுரையின் மகன்கள் கார்த்திகேயன் (36), சுரேஷ் (34) மற்றும் பாலுசேகர் (52), வீரபாண்டியன் (51), பாலமுருகன் (24) பாலகிருஷ்ணன் (45), அருணாச்சலம் (52) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள நடராஜனை தேடி வருகிறார்.
இதே சம்பவத்தில் பாலமுருகன் (52) கொடுத்த புகாரின்பேரில் தங்கராசு மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.