கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2021-08-08 19:32 GMT
பெரம்பலூர்:

பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து ஏற்கனவே கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டிருந்தார். மேலும் தமிழக அரசு, ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல், கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இருப்பினும் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அனுமதியில்லாததால் அவர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில்...
இதில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆடி அமாவாசையையொட்டி அரசின் உத்தரவை மீறி நேற்று அதிகாலை முதலே உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கோவிலில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஆனால் கோவிலின் உள்ளே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கி சென்றதை காண முடிந்தது.
தமிழக அரசு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமையும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவள காளி அலங்காரம்
மேலும் துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, பவள காளி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அந்தப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சிறிய அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆடிப்பூரத்தையொட்டி துறைமங்கலம் புதுக்காலனி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை பால்குட ஊர்வலம் நடத்தப்படுகிறது. கே.கே.நகரில் உள்ள சிவசக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைகிறது. இரவில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்