இருளர் குடியிருப்புக்கு செல்லும் பாதை அடைப்பு

வில்லியனூர் அருகே இருளர் குடியிருப்புக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-08 19:14 GMT
வில்லியனூர், ஆக.9-
வில்லியனூர் அருகே இருளர் குடியிருப்புக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதை அடைப்பு
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம்-தவளக்குப்பம் மெயின் ரோட்டில் 20 இருளர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த இடத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க கடந்த  ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு வசித்தவர்கள், அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு அவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்புக்கு செல்ல தனியார் இடத்தின் வழியாக தான் பாதை உள்ளது.
இந்தநிலையில் நஷ்ட ஈடு வழங்கவில்லை என்று கூறி நிலத்தின் உரிமையாளர் நேற்று அந்த பாதையை வேலி அமைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. எனவே இருளர் குடியிருப்புக்கு செல்லும் பாதை அடைப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து பொதுமக்கள் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தனிடம் முறையிட்டனர். மேலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் நிலத்தின் உரிமையாளரிடம் நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட அவர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாதையை திறந்து விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்