டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் மண்டல முதுநிலை மேலாளர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
வேலூர்,
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள டாஸ்மாக் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேலூர் டாஸ்மாக் கோட்ட மேலாளர் கீதாராணி, உதவி கமிஷனர் (கலால்) வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு சேலம் டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
கொரோனா தடுப்பு விதிகள்
கொரோனா 3-வது அலை பரவல் உச்சம் பெற வாய்ப்புள்ளது என்று மருத்துவத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே டாஸ்மாக் ஊழியர்கள் மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மது, பீர் வகைகளை கொடுக்க வேண்டும்.
கடையின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் வாங்க குறிப்பிட்ட இடைவெளி விட்டு வட்டம் வரைய வேண்டும். கூட்ட நெரிசலை தடுக்க இரும்பு கம்பிகள் அல்லது சவுக்கு கட்டைகளால் கடையின் முன்பு சில அடி தூரத்துக்கு தடுப்புகள் அமைக்க வேண்டும். வழக்கத்தை விட மதுபானங்களின் விற்பனை குறைந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.