செங்கம் அருகே சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

செங்கம் அருகே சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-08 17:58 GMT
திருவண்ணாமலை

அதிகாரிகளுக்கு தகவல்

செங்கம் தாலுகா அரிதாரிமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியின் எதிரே சாலையோரம் பாதி மண்ணில் புதைந்தவாறு இருந்த நடுகல் குறித்து அவ்வூரை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த வெற்றிவேல் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நடுகல் குறித்து ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கல்வெட்டு

இந்த நடுகல் 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. அதில் உள்ள வீரனின் உருவம், இடது கையில் கத்தியும் வலது கையில் அம்பும் கொண்டு போருக்கு தயார் நிலையில் உள்ளது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. அதன் மேற்பகுதியில் 5 வரியிலும், பின்பக்கத்தில் 6 வரியிலும் கல்வெட்டு உள்ளது. அந்தக் கல்வெட்டு மதிரை கொண்ட பரகேசரி என்ற பட்டம் உடைய பராந்தக சோழனின் 33-வது ஆட்சியாண்டில் (கி.பி. 940) வெட்டப்பட்டதாகும். 
அதில் பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்தைச் சேர்ந்த அதிராக மங்கலம் என்ற ஊரில் நடந்த ஒரு போரில் ஈடுபட்டு கலிமுகற் பெருங்கருமான் மருமகன் மலையன் என்பவர் இறந்துள்ளான் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதில் குறிப்பிடும் அதிராகமங்கலம் என்பதே தற்போது அரிதாரிமங்கலம் என வழங்கப்படுகிறது. 

வீரனின் நினைவு நடுகல்

இந்த வீரனின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நடுகல் ஒருகாலத்தில் மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. பின்னர் ஏதோ காரணத்தால் பூமியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராம கூட்டுறவுக்கடை கட்ட பள்ளம் தோண்டும்போது வீரினின் நினைவு நடுகல் கிடைத்துள்ளது. இதை, அப்படியே சாலையோரம் வைத்துவிட்டனர். காலப்போக்கல் அதுவும் மண்மூடி போய் இருந்தது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்தினர் இதை மீட்டு சீரமைத்து மக்கள் பார்வைக்கும் வழிபாட்டுக்கும் எற்றவாறு அமைத்துக் கொடுத்துள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது காஞ்சி வெங்கடாசலம், கிராம உதவியாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்