விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-08-08 17:55 GMT
விராலிமலை:
விராலிமலை தாலுகா இ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணியன். இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4-ந்தேதி சுப்பிரமணி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினரும் அன்று சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு, மதியம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.17 ஆயிரம் மற்றும் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபர் திண்டுக்கல் மாவட்டம், சவேரியார் பாளையத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து விராலிமலை போலீசார் சவேரியார் பாளையத்திற்கு சென்று இஸ்மாயிலை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்