வால்பாறைக்கு தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருகை
வால்பாறைக்கு தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருவதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறைக்கு தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருவதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதனால் வால்பாறைக்கு வெளிமாவட்டம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிடட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் மற்றும் ஜிகா வைரஸ் அதிகரித்து வந்தது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 1-ந் தேதி முதல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். மேலும் இதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வந்தால், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே மீண்டும் வால்பாறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தடையை மீறி வந்தார்களா?
இந்த நிலையில் நேற்று வால்பாறைக்கு தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடினர். இதை பார்த்த வால்பாறை பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர்கள் எப்படி வந்தார்கள் என்ற கேள்வி எழுப்பினார்கள்.
ஆழியார் வனத்துறையின் சோதனைச்சாவடியில் வருவாய் துறை, சுகாதாரத்துறை, போலீசார் ஆகியோர் பணியில் இருக்கும் நிலையில் எப்படி இத்தனை சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் அரசு பஸ்சிலும், இரு சக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சுற்றுலா பயணிகள் வந்ததாகவும், பல தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்கி செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்று பரவும் அபாயம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வால்பாறை பகுதியில் கொரோனா கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தடையை மீறியும், அரசின் கட்டுப்பாடுகளை மீறியும் வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதிகாரிகளின் கண்காணிப்பை மீறியும் அவர்கள் எப்படி வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
வெளியிடங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வால்பாறை பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி பாரபட்சம் காட்டாமல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்ப வேண்டும். அதே நேரம் ஆதார் அட்டை உள்ள உள்ளூர் வாசிகளை வால்பாறைக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.